search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் கோழி"

    நாமக்கல்லில் வாட்டி வதைக்கும் வெயிலால் கோழிகளின் இறப்பு அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    இந்திய அளவில் கோழிப் பண்ணைகள் அதிகம் நிறைந்த மாவட்டமாக நாமக்கல் உள்ளது. தமிழக அளவில் நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றில் 90 சதவீதம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளன. 5 கோடி கோழிகள் வளர்க்கப் பட்டு, அவற்றின் மூலம் தினமும் 3.10 கோடி அளவில் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உள்ளூர் தேவைக்கும், பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும், பள்ளிகளுக்கும் அதிக அளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

    ஆண்டு தோறும் மார்ச் மாதம் கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனால் கோழிகள் வழக்கத்தை காட்டி லும் மிகவும் சோர்வான நிலையில் காணப்படும். இதனால் முட்டை உற்பத்தியும் குறையும்.

    தற்போது பிப்ரவரி மாதமே கோடை வெப்பத்தின் தாக்கம் தொடங்கி விட்டது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் 100 டிகிரியை தொடும் அளவில் கொளுத்தி வருகிறது.

    தற்போதைய சூழ்நிலையில் 10 சதவீதம் அளவில் வயது முதிர்ந்த, நோய் தாக்கிய, சரியாக முட்டையிடாத கோழிகளின் இறப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டால் கோழிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் கோழிப்பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    வெயிலின் தாக்கத்தில் இருந்து கோழிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு பண்ணையிலும், வெப்பம் தாக்காதவாறு சிறப்பு ஏற்பாடாக படுதா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கூண்டின் மேல்பகுதியில் சொட்டு நீர்ப்பாசனம் போல் நீர்த்தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கோழியை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை, இந்த நீர்த்தெளிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கோழிகள் தீவனத்தை எடுப்பதிலும், முட்டையிடுவதிலும் பிரச்சினையில்லை. அவ்வாறு நீர்த்தெளிப்பான்கள் இல்லாத பண்ணைகளில் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கோழிகள் இறக்க நேரிடுகிறது.

    இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி மாநில தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

    இந்தாண்டு வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தின் மாறாக முன்னதாகவே வந்து விட்டதால் கோழிகளை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    கடும் வெப்பம் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் கோழிகளை காப்பாற்ற கோழிப்பண்ணையாளர்கள் சிரமப்படுகின்றனர். ஆகவே காவிரி ஆற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் வழங்கினால், அதன் மூலம் கோழிகளை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×